சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக, சென்னைக்கு விமானத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த கேரள இளைஞர்கள் இருவரை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்து நாட்டிலிருந்து போதைப் பொருட்களை, சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக, சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது, கேரள மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து நாட்டுக்கு சென்றுவிட்டு, மறுநாளே தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று, அவர்களது உடமைகளை சோதித்தனர்.
அதில் உணவுப் பொருட்களுக்கு இடையே ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடியாகும்.
இதனை தொடர்ந்து, இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் சர்வதேச போதை கடத்தும் கும்ப
லுக்கு கடத்தல் குருவிகளாக செயல்பட்டவர்கள் என தெரிய வந்தது. இவர்களிடம் இந்த போதை பொருளை வாங்க இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என சுங்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.