தமிழகம்

கேரள கழிவுகள் ‘ஒப்பந்த முறை’யில் தமிழக எல்லைக்குள் குவிப்பு - வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்தின் தமிழக பகுதிக்கு கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை குமுளி போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ‘ஒப்பந்த முறை’யில் கேரளாவில் கழிவுகளை சேகரித்து தொடர்ந்து தமிழகப் பகுதிக்குள் கொட்டிச் சென்றது தெரிய வந்தது.

தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. கேரளாவில் சுகாதாரம், கழிவு மேலாண்மையில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. இதனால் பல்வேறு கழிவுகள் கேரளப் பகுதியில் இருந்து தமிழக எல்லையில் வந்து கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், உளவுத் துறை போலீஸார் அளித்த தகவலின் பேரில் குமுளி காவல் ஆய்வாளர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீஸார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் 3-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ட்ரம்களில் இறைச்சி, காய்கறி மற்றும் ஹோட்டல் கழிவுகள் இருந்தன. விசாரணையில் அவை குமுளி, வண்டிப்பெரியாறு பகுதி கழிவுகள் என்பது தெரிய வந்தது. இவற்றை முல்லை பெரியாற்றின் வைரவன் தடுப்பணை அருகே கொட்ட வந்தது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் கேரள கழிவுகளை தமிழகப் பகுதியில் கொட்டுவதற்காக அங்குள்ள வர்த்தக நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மூலம் இதனைச் செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கூடலூர் வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் விவேக் (26) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கழிவுகளை ஒப்பந்தம் மூலம் கொண்டு வரும் மற்ற வாகனங்கள் குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து எல்லையோர கிராமங்களான வெட்டுக்காடு, லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “போலீஸார், வனத் துறைக்குத் தெரியாமல் இது நடக்காது. பல ஆண்டுகளாகவே இதுபோன்ற கழிவுகள் தமிழகப் பகுதிக்குள் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன” என்றனர்.

SCROLL FOR NEXT