கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அரசு நிலம் தொடர்பாக தடை மனுவை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி பொதுமக்களும், பாமகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேளம்பாக்கம்: அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று தடை மனு அளித்திருந்த நிலையிலும், மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற்றதாகக் கூறி, கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பொதுமக்களும், பாமகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர் அருகே காயார் ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தாங்கல் கிராமத்தில் களம்புறம்போக்கு, தரிசு வகையைச் சேர்ந்த அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்திருந்தனர். மேலும், அந்த நிலம் தொடர்பாக வேறு எந்தப் பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது எனக் கோரி, கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் தடை மனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தடை மனு நிலுவையில் இருந்தபோதும் அதே நிலம் தொடர்பாக மீண்டும் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தியடைந்த காயார் கிராம பொதுமக்கள் மற்றும் பாமகவினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று, கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தாழம்பூர் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தமிழன்பன், மகளிர் காவல் ஆய்வாளர் கோமதி, போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தாழம்பூர் காவல் ஆய்வாளர், மாவட்ட சார்பதிவாளர் அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.