கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2-வது நாளாக 2 காவல் ஆய்வாளர்கள், 3 பெண் உதவி ஆய்வாளர்களிடம் விசாரணை நடைபெற்றது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த அக்டோபர் முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்தனர். டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையில், தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மார்ச் முதல் வாரத்தில் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சையது அலி, உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட 10 போலீஸார் நேற்று முன்தினம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.
2-வது நாளாக நேற்று சம்பவத்தின்போது பசுபதிபாளையம் காவல் ஆய்வாளராக இருந்த சதீஷ்குமார், கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மணிவண்ணன் மற்றும் ஆர்த்தி உள்ளிட்ட 3 உதவி ஆய்வாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் நேற்று விசாரணை நடத்தினார். இதில், கரூர் நகர காவல் ஆய்வாளராக இருந்த மணிவண்ணனிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இவர், கரூர், டெல்லி என சிபிஐ விசாரணைக்கு 10-க்கும் அதிகமான முறை ஆஜராகியுள்ளார்.