கரூர்: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்தை தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆட்சியர், ஐஜி, எஸ்.பி., போலீஸார், அரசு அதிகாரிகள், தவெக நிர்வாகிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூராய்வு மருத்துவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் உள்ளிட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
டிச 2, 3-ம் தேதிகளில் உச்ச நீதிமன்ற ஒய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று (டிச.19-ம் தேதி) மதியம் 12 மணியளவில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்தை டெல்லி தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த அஜய் திவான் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் தவெக அனுமதி கேட்ட கரூர் லைட் ஹவுஸ் முனை, பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, போராட்டங்களுக்கு போலீஸார் அனுமதி வழங்கும் தலைமை அஞ்சலகம் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிபிஐ எஸ்.பி.பிரவீண்குமார், கரூர் டிஎஸ்பி செல்வராஜ் ஆகியோர் இது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். ஆய்வுக்கு பிறகு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர்.
கரூர் மாநகரமைப்பு அலுவலரிடம் விசாரணை: கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு இன்று (டிச.19-ம் தேதி) கரூர் மாநகராட்சி மாநகரமைப்பு அலுவலர், ஆய்வாளர், சுகாதார அலுவலர், தமிழ்நாடு மின் வாரிய அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.