தமிழகம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஸ்டாலின் படம்: அதிமுக, காங். கவுன்சிலர்கள் போராட்டத்தால் சலசலப்பு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டிருந்ததால், முன்னாள் முதல்வர் பழனிசாமி, காமராஜர் படங்களை வைக்கக்கோரி அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதம் மற்றும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கவிதா தலைமை வகித்தார். ஆணையர் எம்.பிரித்விராஜ், துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் முதல்வர் விஜய் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்த நிலையில் கரூர் மாநகராட்சி 1வது மண்டலக்குழுத் தலைவரான சக்திவேல் முதல்வர் விஜய் படம் அருகே முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டினார்.

மேலும் அவரது இருக்கை அருகேயுள்ள மேஜையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படத்தை வைத்திருந்தார். இதையடுத்து கூட்டம் தொடங்கி உடன், அதிமுக கவுன்சிலர்கள் தினேஷ், சுரேஷ் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் மாட்டியிருப்பதால், முன்னாள் முதல்வர் பழனிசாமி படத்தை மாட்டவேண்டும் எனக்கூறி படம், சுத்தியலுடன் மாநகராட்சி கூட்ட மேடை மீது ஏறினர். அவர்களை திமுக மண்டலக்குழு தலைவர் சக்திவேல், கவுன்சிலர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு, பதற்றமும் ஏற்பட்டது.

அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபு காமராஜர் படத்துடன் வந்து, காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என்றார். அதற்கும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலர்கள் கீழே செல்லாவிடில் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என மேயர் எச்சரித்ததை அடுத்து அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கினர்.

மாநகராட்சி கூட்டரங்கில் ஸ்டாலின் படத்தை வைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கக் கூறியபோது 40க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் கையை உயர்த்தினர். பழனிசாமி படத்தை வைப்பதற்கு ஆதரவு குறித்து கேட்டதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றனர்.

இதையடுத்து மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் எம்.பிரித்விராஜுடன் அவரது அறையில் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியது. சாதாரண கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. முதல் தீர்மானம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு மற்ற 17 தீர்மானங்களும், அவசரக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவசரக்கூட்டத்தில் வைக்கப்பட்டு மனை பிரிவு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை ஒத்திவைக்கவேண்டும் என அதிமுக கவுன்சிலர் சுரேஷ் தெரிவித்தார். மேலும் தேர்தல் நேரத்தில் தனது வார்டில் நடந்த சாலை, சாக்கடை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. கல்வெர்ட் பாலங்கள் உயரமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

மா.கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தண்டபாணி, 41-வது வார்டில் நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டன. இரவு நேரங்களில் 20, 30 நாய்கள் சேர்ந்து இருப்பதால் பெண்கள், முதியவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். பள்ளிகள் தொடங்கிவிட்டதால் குழந்தைகள் பள்ளி சென்று திரும்புகையில் நாய்களைக் கண்டு அச்சமடைகின்றனர். எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர், மாநகராட்சி அதிகாரி, விதிகளின்படி நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT