கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ கண்காணிப்பு குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்த மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல். | படம்: எம்.மூர்த்தி |
கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு முன்பு மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி உள்ளிட்டோர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், உயிரிழந்தோரின் குடும்பத்தினர், நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பல்வேறு துறை அதிகாரிகள், வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சிபிஐ விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏடிஜிபி-க்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று கரூருக்கு வந்தனர்.
இந்தக் குழுவினர் முன்பு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆஜராகி, சம்பவம் குறித்து 3 மணி நேரம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி ஜோஷ் தங்கையா, டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோரும் ஆஜராகி
2 மணி நேரம் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, கூட்ட நெரிசலில் இரு பெண் குழந்தைகளை பறிக்கொடுத்த பெருமாள்- செல்வராணி தம்பதியினர் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
குழுவினரிடம் மனு... இதேபோல, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (தனியரசு) இளைஞர் பேரவை மாவட்டச் செயலாளர் அருள்குமார் மற்றும் கரூர் அமராவதி வியாபாரிகள் நலச் சங்கத்தினர், கரூர் நகர உணவுப் பொருள் வணிகர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் குழுவினரிடம் அளித்த மனுவில், "பிரச்சாரத்துக்கு விஜய் காலதாமதமாக வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டதாகவும், இதற்கு காரணமான விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தனர்.
இதேபோல, தவெக தரப்பில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் மனைவி ராணி மற்றும் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்டோர் குழு முன்பு ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வருகையையொட்டி கரூர் சுற்றுலா மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்றும் விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.