ஆதவ் அர்ஜுனா
புதுடெல்லி: கரூர் உயிழப்பு சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவை சிபிஐ-யின் பரிசீலனைக்கு கரூர் வழக்கை மேற்பார்வையிட்டு வரும் குழு தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி அனுப்பி வைத்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் விஜய் பங்கேற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த வழக்கை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைையிலான குழு மேற்பார்வையிட்டு வருகிறது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில், கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு உள்ளது, அதை முடிக்காமல் விடமாட்டோம் என தெரிவித்துள்ளதாக கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல்வரை குற்றம்சாட்டப்பட்ட நபராக கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெற உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கில் சரியான கோரிக்கையுடன் மனுவை தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து கரூர் விவகாரம் தொடர்பாகவும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.ஐ இயக்குநருக்கு ஆர்.எஸ். பாரதி ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதேபோல் கரூர் வழக்கை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியிடமும் ஒரு புகார் மனுவை கடந்த 7-ம் தேதி ஆர்.எஸ்.பாரதி வழங்கியிருந்தார்.இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி, அந்த மனுவை சிபிஐ-க்கு அனுப்பி வைத்துள்ளார்.