தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் டெல்டா மாவட்டங்களில் கட்சியின் வலுவான முகமாக இருப்பவர். ஆளுங் கட்சியின் தவறுகளை துணிச்சலாக சுட்டிக்காட்டும் விமர்சகராகவும் அறியப்படும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனவே?
இது திமுக-வின் அரசியல் புனைவே தவிர, மக்களின் கருத்தல்ல. காங்கிரஸ் காலத்தை விடப் பல மடங்கு நிதியை வழங்கி, தமிழ் மொழிக்கும் கலாசாரத்துக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பிரதமர் மோடி பெற்றுத் தந்துள்ளார். தமிழகத்தின் மீது உண்மையான பற்றுள்ள அரசாக இருந்திருந்தால் இதை வரவேற்றிருக்கும். ஆனால், திமுக தனது குறுகிய மனப்பான்மையால் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. 2021-ல் இத்தகைய மாய பிம்பங்களை உருவாக்கி திமுக வென்றிருக்கலாம். ஆனால்,2026-ல் அந்த வியூகம் பலிக்காது. மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள். தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும்.
பாஜக கூட்டணி கட்சிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக முதல்வர் சொல்கிறாரே?
தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல், மாநிலத்தைச் சீரழிப்பதையே திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கொலைகளின் தலைநகரமாகத் தமிழகம் மாறிவிட்டது.
ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களே திமுக-வில் இல்லை எனும் நிலைக்கு ஆட்சி நிர்வாகம் ஊழலில் ஊறிப்போயுள்ளது. இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸுடன் கைகோத்துக்கொண்டு, தமிழர்களைப் பற்றி பேச திமுக-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தமிழகத்துக்குப் பெருமை தேடித் தருவதற்குப் பதில், தலைகுனிவையும் சீர்குலைவையும் மட்டுமே திமுக அரசு பரிசாகத் தந்துள்ளது.
மத்திய – மாநில அரசுகள் இப்படி மோதிக் கொண்டே இருப்பது மாநில நலனுக்கு உகந்ததா?
மத்திய அரசுடன் இணக்கமான உறவைப்பேணி, நிறைகளைப் பாராட்டி குறைகளைச் சுட்டிக்காட்டுவதே ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் கடமை. ஆனால், மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும், எத்தனைநலத்திட்டங்களை வழங்கினாலும், அனைத்தையும் கண்மூடித்தனமாக விமர்சிப்பதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அதை எப்படி எதிர்க்கலாம் என முன்கூட்டியே திட்டமிடுவது அவர்களின் காழ்ப்புணர்ச்சி அரசியலையே காட்டுகிறது. இத்தகைய குறுகிய மனப்பான்மை தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் பெரும் தடையாக அமையும்.
தமிழகத்தில் ‘இன்ஜின்’ அரசியல் பெரும் விவாதமாக உருவெடுத்திருப்பதை பற்றி..?
பாஜக-வின் ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சியை விமர்சிக்க திமுக-வுக்கு எந்தத்தகுதியும் இல்லை. இரு அரசுகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை விளங்கும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அமைச்சர்கள் மீது ஒரு சிறு ஊழல் புகாரைக் கூட யாராலும் கூற முடியாது. ஆனால் திமுக ஆட்சியோ, ஊழலில் திளைப்பதோடு, மாநிலத்தை கடன் வாங்குவதில் முதலிடத்துக்கு தள்ளியுள்ளது.
ஆக்கபூர்வமான திட்டங்களை விடுத்து, வெறும் இலவசங்களை வைத்தே மக்களை ஏமாற்ற நினைக்கிறது திமுக. சுருக்கமாகச் சொன்னால், பாஜக-வின் இன்ஜின் என்பது அசுர வேகத்தில் செல்லும் நவீன, பளபளக்கும் 'மெட்ரோ இன்ஜின்'. திமுக-வின் இன்ஜினோ காலாவதியான, துருப்பிடித்த பழைய இன்ஜின்.
விஜய் எத்தகைய அரசியல் சிந்தனையுடன் பயணிப்பதாக நினைக்கிறீர்கள்?
விஜய்யிடம் தெளிவான அரசியல் கோட்பாடுகளோ, தொலைநோக்குச் சிந்தனையோ கிடையாது. அவர் அரசியலையும் ஒரு சினிமாவாகவே அணுகுகிறார். வெறும் காட்சிப்படுத்தல்களின் மூலமே மக்களைக் கவர்ந்துவிடலாம் என நம்புகிறார்.
சில ஊடகங்கள் காட்டும் கருத்துக்கணிப்புகளும், பத்திரிகைச் செய்திகளும் அவருக்குச் சாதகமான பிம்பத்தை உருவாக்கலாம். ஆனால், கள யதார்த்தம் முற்றிலும் வேறானது. குறிப்பாக, தமிழகத்தின் கிராமப்புறங்களில் விஜய்யால் எவ்விதத் தாக்கமும் இல்லை. தேர்தல் என்று வரும்போது, கிராமப்புறங்களில் விஜய் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திப்பது உறுதி.
இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு பின்னால் நிற்கிறார்களே..?
சினிமாவில் நடித்துவிட்டு, எந்த விதமான மக்கள் சேவையும் செய்யாமல், கட்சி ஆரம்பித்து ரசிகர்கள் கூட்டத்தை கூட்டிவிட்டால் ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைக்கிறார் விஜய். அவ்வளவு எளிதாக ஆட்சியை பிடித்துவிட முடியாது. நடிகர்களை பார்க்க கூட்டம் கூடத்தான் செய்வார்கள். நடிகை நயன்தாரா வந்தால், விஜய்யை விட பல மடங்கு கூட்டம் கூடும். ஆனால், விஜய் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பிரிப்பாரே தவிர, ஒருபோதும் அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது.
தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடும் காலம் எப்போது வரும்?
பாஜக பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டுள்ளது. 2031-ல் ஒரு இலக்கை நோக்கி நாங்கள் களப்பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
தமிழக பாஜக-வில் அண்ணாமலையைத் தாண்டி மற்றவர்களின் முகம் இளைஞர்களுக்கு பரிச்சயமாகவில்லை என்பதை ஏற்கிறீர்களா?
தமிழக அரசியலில் சூறாவளியைப் போல மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார் அண்ணாமலை. பொதுமக்கள், இளைஞர்களிடம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. பாஜக-வினர் அனைவரும் தேசத்தை மையமாக வைத்து செயல்படக் கூடியவர்கள். இங்கே என்றைக்குமே தலைவர்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. உண்மையில், அண்ணாமலையின் காலம் தமிழகத்தில் பாஜக-வின் எழுச்சிக் காலம் தான்.
தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகியிருப்பது பாஜக-வின் தேர்தல் வியூகத்தைப் பாதிக்குமா?
குடும்ப சூழ்நிலை காரணமாக அண்ணாமலை விலகியிருக்கிறார். நிச்சயம் தேர்தல் நேரத்தில் அவர் பிரச்சாரத்துக்கு வருவார். திமுக ஆட்சியின் முகத்திரையைக் கிழிப்பதில் அண்ணாமலைதான் முதல் நபராக இருப்பார். திமுக ஆட்சியை வீழ்த்துவதிலும் அண்ணாமலை தான் முக்கியமானவராக இருப்பார்.