தமிழகம்

“தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு” - கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

செய்திப்பிரிவு

சிவகங்கை: தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறான கருத்து என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டது.

நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தனர். நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த், ஆணையர் அசோக்குமார், கவுன்சிலர்கள் விஜயகுமார், மகேஷ், பிரியங்கா, வீனஸ் ராமநாதன், சி.எல்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முறையாக அழைக்கவில்லை என்று கூறி பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் விலகிய இயக்கத்துக்கு பாதிப்பும், அவர் சேர்ந்த இயக்கத்துக்கு பலமும் ஏற்படும்.

தவெகவை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அக்கட்சியும் கணிசமாக வாக்குகளை பெறும். வரும் தேர்தலில் 3 முனைப் போட்டி என்று கூற முடியாது. சீமானும் களத்தில் உள்ளார். எஸ்ஐஆர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த ஜனவரியிலேயே தொடங்கியிருக்கலாம்.

சிவகங்கை பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. உடன் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் உள்ளிட்டோர்.

2026 மார்ச் மாதம்தான் தேர்தல் வரும் என்பதால், சிறப்பு தீவிர திருத்தப் பணி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். பிஹாரைப் போல தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறையாது.

இறந்து போனவர்கள்தான் நீக்கப்படுவர். தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறான கருத்து. பாஜகவுக்கு யாரைத் தலைவராக நியமித்தாலும் அக்கட்சியை தமிழக மக்கள் நிராகரிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT