காரைக்குடி: “மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் யார், யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புவது, கோயிலில் தீபம் ஏற்றுவது குறித்து அரசியல் பேசுவது வேதனையாக உள்ளது. அனைத்துக் கட்சிகளிலும் தலைவர்களைத் தலைவர்களாகப் பார்க்காமல், கடவுளாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.
மேலும், “முதல்வர், சில அமைச்சர்களை தவிர, தவெக எம்எல்ஏக்களை எனக்கு தெரியாது” என்று அவர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கோவை பெரியார் நூலகத்தில் நடைபெற்றது மிகப் பெரிய மோசடி. இந்த மோசடி முதன்முறையாக நடைபெற்றதாக நம்ப முடியவில்லை.
பல ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வெறும் பண மோசடி மட்டுமல்ல; சமூகத்தின் மீதான மோசடி.
போலீஸார் மக்களை அணுகும் விதத்திலும், விசாரணை நடத்தும் முறையிலும் மாற்றம் தேவை. டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வது குறித்தும், அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்துவது குறித்தும் பயிற்சி வழங்க வேண்டும்.
போலீஸார் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும். வாகனச் சோதனைகளைத் தீவிரப்படுத்துவதோடு, ரவுடிகளின் பட்டியலைத் தயாரித்து தனிப்படை மூலம் கண்காணிக்க வேண்டும்.
காவல் நிலையங்களில் ரவுடிகள் வாரந்தோறும் கையெழுத்திடும் நடைமுறையையும் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான கொலைகள் பழிக்குப் பழியாக நடைபெறுவதால், அதை தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரையும் அடித்துதான் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.
காவிரி நீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும். அணை கட்டினாலும், கட்டாவிட்டாலும் சட்டப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு என்பது மாநில அரசை சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல. தேசிய அளவில் பொருளாதார சூழலை பொறுத்தது. சில பொருட்களின் விலை உயர்வுக்கு மாநில அரசின் நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம்.
முதல்வர், சில அமைச்சர்களை தவிர, தவெக எம்எல்ஏக்களை எனக்கு தெரியாது. அனைத்துக் கட்சிகளிலும் தலைவர்களைத் தலைவர்களாகப் பார்க்காமல், கடவுளாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதனால்தான் பொது நிகழ்ச்சிகளில் தேவையில்லாமல் புகழ்ந்து பேசுகின்றனர். இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் தான் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். யாரோ யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புவது, கோயிலில் தீபம் ஏற்றுவது குறித்து அரசியல் பேசுவது வேதனையாக உள்ளது” என்று அவர் கூறினார்.