தமிழகம்

“எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது அல்ல” - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

செய்திப்பிரிவு

தேவகோட்டை: எனது அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் என்னுடையது அல்ல என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவை பாஜக அரசின் கைப்பாவைகளாக உள்ளன. அவர்கள் எதிர்க்கட்சியினர் வீடுகளில் உள்நோக்கத்தோடு சோதனையிடுகின்றனர்.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும், வேட்பாளராகவும் இருக்கும் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அவரை ராகுல் காந்தியுடன் பிரச்சாரத்துக்கு போக விடாமல் உள் நோக்கத்தோடு தடுத்துள்ளனர்.

அண்ணாமலை எம்.பி.யோ, எம்.எல்.ஏ.வோ, அமைச்சரோ கிடையாது. அப்புறம் எப்படி மத்திய அரசு அதிகாரிகளின் நடவடிக்கை அவருக்குத் தெரிகிறது. இதன்மூலம், அரசு அமைப்புகள் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருப்பது தெரிகிறது.

முதல்வரும், காங்கிரஸ் தேசியத் தலைவரும் ஒரே மேடையில் பங்கேற்று பேசியுள்ளனர். காங்கிரஸ், திமுக ஒற்றுமையாகத்தான் உள்ளன. இந்தத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும். எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் என்னுடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT