சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை, தாம்பரம், விழுப்புரம், காட்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு இல்லாத 16 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம்:
நவ.23, 24, 25-ம் தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் ரயில் (06143) பகல் 11.40 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கமாக, அதே நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் (06144) மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா சாலை, காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட் ஆகிய நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
நவ.23, 24, 25-ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.30 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கமாக, அதே நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். விழுப்புரம் - வேலூர் கன்டோன்மென்ட், விழுப்புரம் - திருவண்ணாமலை, காட்பாடி - திருவண்ணாமலை இடையேவும் மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.