புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. தீபத் திருநாள் முடிந்த 3 நாட்களுக்குள் உத்தரவு செயல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்ததுடன், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்கிடையே, மலை உச்சியில் பொதுமக்களை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் கோரி ராம ரவிக்குமாரும் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் 4 நாட்களாக நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், அதன் கருத்துகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், நவம்பர் 24-ம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருநாளில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கப்படுகிறது. இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே.
தீபம் ஏற்றும் இடத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்றச் செல்லும் குழுவில் எத்தனை பேர் இடம்பெற வேண்டும், யார் யார் செல்ல வேண்டும் என்பதை கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும்.
தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இதற்குத் தேவையான பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவியையும் பெறலாம்.
தீபத்தூண் பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட குழுவினர் மற்றும் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டுமே செல்லலாம்.
தீபம் ஏற்றும் பகுதியில் பொது மக்கள் கூடுவது, ஊர்வலம் நடத்துவது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, முழக்கங்கள் எழுப்புவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
வழக்கமாக வழிபாடு நடைபெறும் இடங்களில் எந்த இடையூறுமின்றி வழிபாடுகள் தொடர வேண்டும். தர்காவுக்குச் சென்று வருவதற்கும் எந்தத் தடையும் ஏற்படுத்தக் கூடாது.
இந்த உத்தரவின் மூலம் மலைப்பகுதிக்குள் நுழையவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ யாருக்கும் கூடுதல் உரிமை வழங்கப்படவில்லை. பாரம்பரிய வழிபாட்டு உரிமை மற்றும் நிலத்தின் மீதான உரிமை தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு தீபம் ஏற்ற வழங்கப்பட்ட அனுமதியையோ, அந்த நிகழ்வையோ எதிர்காலத்தில் பாரம்பரிய வழக்கம் அல்லது நுழைவு உரிமைக்கான ஆதாரமாகக் காட்ட முடியாது. வரும் ஆண்டுகளிலும் தீபம் ஏற்ற அனுமதி கோருவதற்கும் இதனை ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.
தற்போதைய உத்தரவைப் பின்பற்றுவதால் எந்தத் தரப்புக்கும் எதிராகப் பாதகமான முடிவுகள் எடுக்கக் கூடாது. சட்டரீதியான, நடைமுறை ரீதியான அல்லது பாதுகாப்பு சார்ந்த தடைகள் இருந்தால் அவற்றை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
கார்த்திகை தீபத் திருநாள் முடிந்த 3 நாட்களுக்குள் உத்தரவு செயல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை 2027-ம் ஆண்டு ஜனவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கொண்டாட்டம்
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை வரவேற்று திருப்பரங்குன்றத்தில் ஏராளமான பக்தர்கள், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முன்பு 108 தேங்காய்களை உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன் கூறும்போது, “பல தசாப்தங்களாக நடைபெற்ற இந்துக்களின் போராட்டத்துக்கு நீதி கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறைப்படி நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சேவுகன் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவு பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காகப் போராடி உயிரிழந்த ராஜ கோபால், பூர்ண சந்திரன் ஆகியோரின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.