தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

காவிரி - வைகை - குண்டாறு திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மனு: மாணிக்கம் தாகூர் கண்டனம்

‘கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயல்’

வெற்றி மயிலோன்

சென்னை: ‘காவிரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயல்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், கட்டப்பட்ட முதற்கட்டக் கட்டுமானங்களை இடிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்திருப்பது முற்றிலும் தேவையற்றது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்.

வெள்ளக் காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் சுமார் 8.60 டி.எம்.சி உபரி நீரை மட்டுமே நமது மாநில எல்லைக்குள் திருப்பிவிடும் உள்மாநிலத் திட்டத்தை முடக்கப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையிலிருந்து தொடங்கி சுமார் 255.60 கிலோமீட்டர் தொலைவிற்குக் கால்வாய் அமைத்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் எனது சொந்தத் தொகுதியான விருதுநகர் உள்ளிட்ட வறட்சி பாதித்த 7 மாவட்டங்களின் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் நிலங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாபெரும் திட்டமிது.

2026-27 நிதிநிலை அறிக்கையிலும் ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுத் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், இதற்குத் தடை கோருவது தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் செயலாகும்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் இதுபோன்ற உபரி நீர் இணைப்புத் திட்டங்களைத் தங்கள் மாநில நலனுக்காகச் செயல்படுத்தியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் பட்டிசீமா திட்டத்தின் மூலம் கோதாவரி உபரி நீரை கிருஷ்ணா நதியுடன் இணைத்துள்ளது; தெலங்கானா அரசு காளேஸ்வரம் மற்றும் பாலமூரு - ரங்காரெட்டி திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அதேபோல மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றன.

நாட்டின் பல மாநிலங்களும் வெள்ள உபரி நீரைப் பயன்படுத்தி விவசாயிகளைக் காக்கும்போது, தமிழ்நாடு தனது எல்லைக்குள் கடலில் கலக்கும் உபரி நீரைப் பயன்படுத்துவதை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. கர்நாடக அரசு இந்த தேவையற்ற சட்டப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய அரசின் நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் நடுநிலையோடு செயல்பட்டு தமிழ்நாட்டின் நியாயமான நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT