ஈரோடு: ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசினார்.
ஈரோடு சம்பத் நகரில் கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து, அவர் மேலும் பேசியதாவது: ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
திமுக, காங்கிரஸ் இண்டியா கூட்டணி ஒன்றுபட்டால் தான் இந்தியாவில் நல்லாட்சியும் அமைதி நிலவும். பாஜக இந்தியாவில் வேற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறது. இதற்கு நாம் வழிவகுக்கக் கூடாது.
இந்திய தேசத்தின் கட்டமைப்பில் தமிழகம் மற்றும் கர்நாடகா முக்கிய பங்காற்றுகிறது. இதில், தமிழகம் 2-வது முக்கியமாக பங்களிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக நலத்திட்ட உதவிகளை முதல்வர் திறம்பட செயல்படுத்தியுள்ளார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள புதிய கட்சிகள் என்ன செய்ய போகிறார்கள், அவர்களின் கொள்கைகள் தெரியாது. தற்போது உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கான கூட்டணி. இளைஞர்கள், மகளிருக்கு உங்கள் தலைவர்களை திரையில் தேடாதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.