தாராபுரத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய கனிமொழி.

 
தமிழகம்

“பெண்களை நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தவெக” - கனிமொழி சாடல் @ தாராபுரம்

எம்.நாகராஜன்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து, திமுக தேர்தல் பணிமனையில் மகளிர் அணி கலந்தாய்வுக் கூட்டம் இன்று (செப்.28) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து கனிமொழி எம்பி பேசியதாவது:

மக்களின் தீர்ப்பை மதிக்காமல் வேறு கட்சிக்கு மாறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ‘ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாகச் சீர்குலைத்துவிட்டது. மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள், 10 -க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் என குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் சுயசார்புடன் வாழவே திமுக அரசு புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியது.

ஆனால், ‘தாய்மாமன் சீர்’ என்ற பெயரில் மோதிரம் வழங்கி பெண்களை மீண்டும் நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். இது ஒரு தெளிவற்ற மனநிலையின் வெளிப்பாடு.

சமூக வலைதளங்களில் தவெகவினர் திமுக பெண்களை தவறாக பேசுகிறார்கள். இதனை விஜய் என்றாவது கேட்துண்டா? இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகத்தைக் காக்க திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT