கீழடி அகழ் வைப்பகத்தில் மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கனிமொழி எம்.பி.
முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளுவால் பழனிசாமியுடன் விவாதிக்க அவருக்கு நேரமில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழ் வைப்பகத்தை தூத்துக்குடி அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கனிமொழி எம்.பி. நேற்று பார்வையிட்டார். அவர்களுக்கு தொல்லியல்துறை அதிகாரிகள் விளக்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: தமிழர்களின் வரலாறு, நாகரிகம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் கொண்ட தமிழ் மொழி ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை கீழடி அகழ் வைப்பகம் மூலம் தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்காக கொண்டு வரப்பட்டது தான் 100 நாள் வேலை உறுதித் திட்டம். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இத்திட்டத்தில் 100 நாட்களுக்கு வேலை கொடுத்ததே இல்லை. அதிகபட்சமாக 40 நாட்களுக்குத் தான் வேலை கொடுக்கப்பட்டது.
தற்போது இந்த திட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமின்றி, வேலை கொடுக்கும் உரிமையையும் மாநில அரசிடமிருந்து பறித்துள்ளனர். முழுமையாக மத்திய அரசே ஊதியம் வழங்கி வந்த நிலையில், அதிலும் 40 சதவீதத்தை மாநில அரசை கொடுக்க சொல்லியுள்ளனர். கூடுதலான நபர்களுக்கு வேலை கொடுத்தால் மாநில அரசு தான் ஊதியம் வழங்க வேண்டும். இதன்மூலம் இந்த திட்டத்தையே முடக்கி விட்டனர்.
திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி உலகம் முழுவதும் பெருமைப்பட்டவர் தான் பழனிசாமி. முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளுவால் திட்டங்கள் குறித்து பழனிசாமியுடன் விவாதிக்க அவருக்கு நேரமில்லை. கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் அவருடன் விவாதிக்க தயாராக உள்ளனர். அதையெல்லாம் தாண்டி வேறு கேள்விகள் அவருக்கு இருந்தால் முதல்வர் உரிய பதில் அளிப்பார். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழரசி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.