தமிழகம்

உதயநிதி கைது: துரைமுருகன் முதல் கனிமொழி வரை திமுக முக்கியத் தலைவர்கள் கண்டனம்

தமிழினி

சென்னை: “நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” என திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கண்டித்துள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை தவெக அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம். மிக மோசமான ஜனநாயகப் படுகொலை.

முதல்வர் விஜய் தனது “Apprentice” ஆட்சியில் சரியும் சட்டம் - ஒழுங்கு, மாநிலம் முழுவதும் மக்களை வாட்டும் மின்கட்டணப் புகார்கள், விவரம் இல்லாத அமைச்சர்கள் அடிக்கும் கூத்துகள், “இம்” என்றால் சிறைவாசம் என்ற ஆணவத்தைப் பிரதிபலிக்கும் அடக்குமுறைகள், பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள், எல்லாவற்றுக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்த வைக்கும் காவிரிப் பிரச்சினையில் முதல்வரின் மவுனமும் மெத்தனமும் என எதிர்க்கட்சித் தலைவர் நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள கேள்விகளுக்கு இன்றே அஞ்சி நடுங்கி, தஞ்சாவூரில் பேசாத ஒன்றைப் பேசியதாகப் புனைந்து, கற்பனைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் எப்ஐஆர் ஒன்றைப் போட்டு, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது அடாவடி தவெக அரசு.

கொடுங்கோல் ஆட்சியின் அலங்கோலத்தினை அரங்கேற்ற இந்த அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பாசிசத்தின் உச்சகட்டமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள முதல்வர் விஜய் இப்போது நடத்தி வருவது திமுக கூட்டணியிடம் இருந்து கடன் வாங்கிய கட்சிகளுடன் ஆதரவிலான ஆட்சி என்பதை ஏனோ “அதிகார போதையில்” மறந்து, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார்.

முதல்வர் விஜய் இப்படியெல்லாம் திமுகவையும் மிரட்ட முடியாது. எங்கள் எதிர்க்கட்சித் தலைவரையும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம். சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில்,“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.

நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். உச்சக்கட்ட அடக்குமுறையும், அரசியல் பழிவாங்கும் போக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.

ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசுவோர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஆட்சியின் பலத்தை காட்டுவதல்ல; மாறாக, அதன் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சியின் குரலை வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முயல்வது ஜனநாயக மரபுகளுக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் முற்றிலும் எதிரானது. இது ஒரு தலைவருக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT