கனிமொழி எம்.பி
சென்னை: “புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கக்கூடியவர்கள் திமுகவை மட்டும்தான் எதிர்த்து பேசுவார்கள். ஒன்றிய அரசை எதிர்த்துப் பேச மாட்டார்கள். பாஜகவுடன் நிறைய பி டீம் இருக்கிறார்கள். கவனமாக வாக்களியுங்கள்” என தவெக தலைவர் விஜய்யை, திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
மானாமதுரை திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து திமுக எம்பி கனிமொழி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் நாம் கவனமாக வாக்களிக்க வேண்டும். பாஜகவுடன் நிறைய பி டீம் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைதான் விமர்சிப்பார்கள். பாஜக என்ன செய்தாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள. நம்முடைய பகைவர்கள் என்ற பெருமையை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள்.
புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கக்கூடியவர்கள் திமுகவை மட்டும்தான் எதிர்த்து பேசுவார்கள். ஒன்றிய அரசு எது செய்தாலும் அதை எதிர்த்து பேச மாட்டார்கள். அதேபோல அதிமுகவையும் எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள்.
திமுகவை திரும்பத் திரும்ப சாடி, நம்மைப் பற்றி பேசி பெருமையை தேடிக் கொள்ளலாம் என நினைக்கக் கூடியவர்களை நம்பி யாரும் ஏமாந்து விடாதீர்கள். அது உங்களுடைய வாக்குகளை வீணாக்கக்கூடிய செயல்.
வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை இந்த தொகுதியில் முறியடிப்போம் பாஜகவுக்கு ஒரு பிடி மண் கூட தமிழகத்தில் இருந்து கிடைக்காது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.