கனிமொழி எம்பி

 
தமிழகம்

“எம்எம்டிஆர் மசோதா மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும்” - கனிமொழி கண்டனம்

தமிழினி

சென்னை: மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள MMDR (எம்எம்டிஆர் ) சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும் என திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள MMDR சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

2024-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த திருத்தம் என்ன?

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை மக்களவையில் மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்தது.

இந்த 9டி சட்டப்பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக விதிக்க முடியாது.

ஏற்கெனவே மாநில அரசுகள் விதித்த இதுபோன்ற வரிகளை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும்போது, நிலுவை வரித் தொகையை அவர்கள் செலுத்தத் தேவையில்லை.

கனிமங்கள், அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதை பயன்படுத்தி மத்திய அரசு கட்டுப்பாடு செலுத்த முடியும்.

இதனாலேயே இந்தச் சட்டத்திருத்தத்துக்கு பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

SCROLL FOR NEXT