தமிழகம்

திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.8,000 கூப்பன் அறிவிப்பு ஏன்? - கனிமொழி விளக்கம்

செய்திப்பிரிவு

திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.8000 கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஏன் என்பதற்கு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கனிமொழி கூறியதாவது: 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம், தமிழ்ப் புதல்வன் போன்ற சொல்லப்படாத திட்டங்களையும்முதல்வர் நிறைவேற்றினார். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 மத்திய அரசின் ஒத்துழைப்பால்தான் செய்து தரமுடியும் என்ற நிலையில் உள்ளன. மேலும், 64 திட்டங்கள் அப்பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.

          

தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை பல்வேறு தரப்பினராலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இதற்காக 80,000 பேரிடம் கருத்துகள் பெறப்பட்டன. ஒவ்வொரு துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன்படியே முழுமையான ஆய்வுக்கு பின் இந்த தேர்தல் அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. திமுகவின் திட்டங்களை காப்பி அடித்து அதிமுக தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளது. அதிமுக செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டு கொண்டே போகும்.

நிலைமை இப்படியிருக்க திமுக தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்துக்கு எப்ஐஆர்கூட பதிவு செய்ய முன்வராமல், குற்றவாளிகளை காப்பாற்ற அத்தனை முயற்சிகளை அதிமுக செய்தது . ஆனால், திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார்.

இலவசங்கள் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்தி, அதை அரசியலாக்க ஒரு தரப்பினர் முயற்சி செய்கிறார்கள். மக்களின் கைகளில் பணம் சேரும்போதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். ஏனெனில், மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் போதுதான், ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் முழுமையாக வளர முடியும். அதனால் இதை இலவசமாக பார்க்காமல், சமூக முதலீடுக்கான முன்னெடுப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.

அதன்படியே பெண்களின் குடும்பச் சுமையைக் குறைக்கும் வகையில் தேவையான பொருளை வாங்க ரூ.8000 கூப்பன் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்தப் பொருள் தேவையோ இந்த கூப்பன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

நாங்கள் எல்லாருக்கும் ஃப்ரிட்ஜ் கொடுக்கலாம். ஆனால், சிலர் வீட்டில் ஃப்ரிட்ஜ் வைத்திருக்கலாம். அவர்களுக்கு வேறு பொருள் தேவைப்படலாம். அவர்கள் விரும்பும் பொருளை வாங்கிக் கொள்வதற்குதான் இந்தக் கூப்பன் முறை. பெண்களின் வேலைச் சுமையை குறைக்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT