தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக கோவிந்தாபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பிரச்சாரம் செய்தார்.
தாராபுரம்: ஜனநாயக உரிமைகளையும் தமிழகத்தின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், திமுக வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது: மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் அளித்த வாக்குறுதிகளை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் பொதுமக்களை அணுகி வாக்கு கேட்பதை விட, அவர்களின் உரிமைகளையும் தேவைகளையும் தொடர்ந்து பாதுகாப்பதே அரசியல் கட்சிகளின் கடமை.
திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தேசிய அளவில் விலைவாசி உயர்வு 4.4 சதவீதமாக இருந்தது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். மத்திய அரசின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் முடிவுகளாக இருந்தாலும், தமிழகத்தின் நலனுக்கு பாதிப்பு என்றால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து தலைவர்கள் போராடி வரும் சூழலில் தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பாதது ஏன்?
தமிழகத்தில் தவெகவுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது இடைத்தேர்தலில் எதிரணியில் இருப்பது ஏன், சமூக வலைதளங்களில் திமுகவைச் சேர்ந்த பெண்கள் குறித்து தவெகவினர் அவதூறாகப் பேசுவது குறித்து விஜய் கண்டனம் தெரிவித்துள்ளாரா, தமிழகத்தின் உரிமைகள், மாநில நலன்கள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் தாராபுரம் அருகே மானூர்பாளையம் என்ற இடத்தில் பேசிய அவர் தொடர்ந்து, கோவிந்தாபுரம், மணக்கடவுகிளாங்குண்டல் உள்ளிட்ட தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.