தூத்துக்குடி: தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. நேற்று கூறியதாவது: டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது ஆச்சரியமாக இருந்தாலும் நல்ல முன்னேற்றத்தின் அடையாளம்.
தங்களை தரக்குறைவாக பேசுவதாகக் கூறி, பெண்களை கைது செய்யும் தவெக அரசு, தங்கள் கட்சியினருக்கு எதிராக பேசும் பெண்கள் மீது தவெகவினர் சமூக வலைதளங்களில் நடத்தும் அவதூறு தாக்குதல்களை கண்டுகொள்வதில்லை. சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த பெண்கள், தவெகவினரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் பெண்கள், சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்கள் என பலரையும் குறிவைத்து தவெகவினர் தரக்குறைவான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். பெண்களை அவமதிக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராகவும் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்திருக்கிறார்கள். பெண்களை மதிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் கூறிக்கொள்ளும் இவர்களின் லட்சணம் இதுதானா? வைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ மீது நிறைய புகார்கள் இருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூய ஆட்சி, தூய சக்தி என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரிகிறது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.