தமிழகம்

காமராசர் காலை உணவுத் திட்டம் செப்.22-ல் விரிவாக்கம்: சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: ​காம​ராசர் காலை உணவுத் திட்ட விரி​வாக்​கம் முதல்​வர் விஜய்​யால் சென்​னை​யில் செப்.22-ம் தேதி தொடங்கி வைக்​கப்பட உள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்​தைகளுக்கு காலை உணவு வழங்​கும் நோக்​கத்​தில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது.

இதன்​கீழ் கிச்​சடி, பொங்கல் என தின​மும் ஏதேனும் ஒரு உணவு வழங்​கப்​படு​கிறது. தற்​போது மாநிலம் முழு​வதும் உள்ள 37,447 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் படிக்​கும் 19.34 லட்​சம் குழந்​தைகளுக்கு காலை உணவு வழங்​கப்​படு​கிறது.

தமிழகத்​தில் தவெக ஆட்​சிக்கு வந்த பின்​னர் காலை உணவுத் திட்​டத்​தின் பெயர் காம​ராசர் பெயரில் மாற்​றப்​பட்​டு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது. இதற்​கான தொடக்க விழா பெரி​யார் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி நடை​பெறும். காம​ராசர் பிறந்த விருதுநகரில் உள்ள பள்​ளி​யில் இத்​திட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைப்​பார் என்று ஏற்​கெனவே தகவல்​கள் வெளி​யாகி​யிருந்​தன.

இந்த நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக, காம​ராசர் காலை உணவுத் திட்ட விரி​வாக்க நிகழ்ச்சி செப்.22-ம் தேதிக்கு தள்ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. ‘சென்​னை​யில் இத்திட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைப்​பார்.

இடைத்​தேர்​தல் நடை​பெறும் தாராபுரம், மது​ராந்​தகம் தொகு​தி​கள் தவிர்த்து மற்ற அனைத்து இடங்​களி​லும் இத்திட்​டம் 22-ம் தேதி​யில் இருந்து செயல்​பாட்​டுக்கு வந்​து​விடும்’ என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கு சமூகநலத்​ துறை செயலர் பல்​லவி பல்​தேவ் அனுப்​பிய சுற்​றறிக்​கையில் கூறப்​பட்​டுள்​ளது.

முதல்வர் இன்று திரும்புகிறார்: தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் கடந்த 10-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்வரின் லண்டன் பயணத்தில் சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் விஜய், லண்டனில் இருந்து நேற்று இரவுபுறப்பட்டார். துபாய் வழியாக இன்று (செப்.17) காலை 8 மணிஅளவில் சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT