தமிழகம்

மக்கள் நீதி மய்யத்துக்கு 15 தொகுதிகள் விருப்பமாம்

திமுகவிடம் பட்டியல் தந்திருப்பதாக தகவல்

எம்.கே.விஜயகோபால்

இந்தத் தேர்தலில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி, தங்களுக்கு விருப்பமான 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயாரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை பெரிய அளவிலான அழுத்தம் எதையும் திமுக-வுக்கு கொடுக்கவில்லை. கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தரப்பட்ட ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுடன் அக்கட்சி திருப்தி அடைந்து விட்டதாக மக்களவைத் தேர்தலின் போது விமர்சனங்கள் எழுந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறது மநீம.

          

இதுகுறித்து நம்மிடம் பேசிய அக்கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் சிலர், ‘‘திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே இம்முறை கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின்றன. மக்கள் நீதி மய்யத்துக்கும் அதற்கான தேவை இருக்கிறது. அதற்கேற்ற எண்ணிக்கையில் நாமும் போட்டியிட வேண்டும் என்பது தலைவர் கமலின் விருப்பம். அதற்காக, மாநிலம் முழுவதும் 15 தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம்.

அதன்படி, கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சென்னை வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தியாகராய நகர், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மதுரை மத்தி ஆகிய 15 தொகுதிகள் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. எங்களின் இந்த உத்தேசப் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கி இருக்கிறோம்.

சூழலுக்கு ஏற்ப இந்தப் பட்டியலில் இருந்து 3 அல்லது 4 தொகுதிகளை திமுக எங்களுக்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, கோவை, சென்னை, திருச்சி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களது சொந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். இதையும் நாங்கள் திமுக-விடம் வலியுறுத்துவோம்” என்றனர்.

SCROLL FOR NEXT