கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர செயற்குழு-நிர்வாகக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
மநீம கட்சி திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. தொகுதிப்பங்கீடு தொடர்பாக மநீம கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு நேற்று முன்தினம் (புதன்கிழமை) முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மநீம கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு 3 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் மநீம கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்றும் அதுவும் திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவினர் வலியுறுத்தியாக தெரிகிறது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம், தாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கோரியுள்ளதாகவும் எத்தனை தொகுதிகள் என்பதை இப்போது கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.
இந்த சூழலில் மநீம கட்சியின் செயற்குழு-நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று மநீம வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.