கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ்
கள்ளக்குறிச்சி: “எனது சொந்த ஊர் மூங்கில்பாடி. ஆனால், எங்கள் ஊரில் மூங்கில் மரமே இல்லை. அதன் நடவு முறைப்பற்றி விவசாயிகளுக்கும் தெரியவில்லை” என்று கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் கூறினார்.
மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், மக்களவை உறுப்பினர் மலையரசன் தலைமையில், ஆட்சியர் பத்மஜா முன்னிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எம்.பிக்கள் மலையரசன் (கள்ளக்குறிச்சி), ரவிக்குமார் (விழுப்புரம்) ஆகியோர் பங்கேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வரும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து துறை வாரியாக கேள்வி எழுப்பினர்.
அந்த வகையில், தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் பொது நிலங்களில் மூங்கில் நடவுச் செடிகள் எந்த அளவுக்கு நடப்படுகின்றன? இதில் அரசு மானியம் பெற்றவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும், பயனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து எம்.பிக்கள் இருவரும் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், “மூங்கில் வளர்ப்பில் யாரும் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை. மூங்கில் பயிர்களை அனைத்து இடங்களிலும் நடவு செய்ய இயலாது, விவசாயிகளும் அதை விரும்புவதில்லை” என்று தெரிவித்தார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் குறுக்கிட்டு, “எனது சொந்த ஊர் மூங்கில்பாடி. ஆனால், எங்கள் ஊரில் மூங்கில் மரமே இல்லை. அதன் நடவு முறைப்பற்றி விவசாயிகளுக்கும் தெரியவில்லை” என்றார்.
இதற்கு பதிலளித்த தோட்டக்கலைத்துறை அதிகாரி, “விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. நாங்களாகத்தான் இத்திட்டத்தின் கீழ் நடவு செய்ய கட்டாயப்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.