சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான விவகாரம் என்பது தவெக அரசுக்கு ஒரு பின்னடைவுதான் என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான பிரச்சினை கசியும்போதே தலைமைச் செயலர் பாதிக்கப்பட்டவரிடம் எழுத்து மூலமாகப் புகார் வாங்கியிருக்க வேண்டும். தொடர்ந்து எம்எல்ஏவிடமும் விளக்கம் பெற்று, முதல்வரிடம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த விவகாரத்தில் காலதாமதம் செய்ததால் பிரச்சினை பெரிதாகிவிட்டது. இந்தப் பிரச்சினை குறித்து ஆளுநரிடம் உதயநிதி என்ன புகார் கொடுத்தார் என்று தெரியாது. ஆனால், விசாரணை அதிகாரியை நியமித்த பின்னர், அவரிடம்தான் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம். ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை விசாரணை அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும்.
சாட்சிகளைக் கலைத்துவிடுவார், தப்பியோடி விடுவார் என்று நினைத்தால்தான் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்மன் கொடுத்து விசாரித்தால் போதும். ஏற்கெனவே உதயநிதியை கைது செய்ததும் தவறுதான்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான பிரச்சினை என்பது தவெக அரசுக்கு ஒரு பின்னடைவுதான். அது தினசரி பேசும் பொருளாக மாறிவிட்டது. தமிழகத்தில் தற்போது கொலைகள் அதிகரித்ததாகக் கூறுகின்றனர். ஆனால், கடந்த ஆட்சியிலும் இதுபோன்று நடைபெற்றன.
கடந்த திமுக அரசும் சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் தவறிவிட்டது. தவெக அரசும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட புதிதாக முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக ஏற்றிய இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டது” என்று அவர் கூறினார்.