இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

 
தமிழகம்

நவ.24-ல் திருப்பரங்குன்றம் தீப தூணில் அரசு தீபம் ஏற்றும் என்று எதிர்பார்க்கிறோம்: இந்து முன்னணி

மு.சக்தி

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி நடத்தும் போராட்டத்திற்கு முருக பக்தர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை அரசு பல வருடங்களாக தடுத்து நிறுத்தி உள்ளது. மலை உச்சியில் உள்ள ஆக்கிரமிப்பு தர்காவை காரணம் காட்டி இந்துக்களுக்கு அநீதி இழைக்கிறது. தீபத் தூணில் தீபம் ஏற்றிட இந்து முன்னணி துவங்குவதற்கு முன்பே பல பேர் பல போராட்டங்களும் உயிர்த்தியாகமும் செய்துள்ளனர்.

இந்து முன்னணி ஆரம்ப காலத்தில் இருந்து பலவிதமான போராட்டங்கள் நடத்தியதை இந்த அரசு மற்றும் மதுரை வாழ் மக்கள் நன்கு அறிவர். இந்து சமுதாய உரிமைக்காக இந்து முன்னணி, மாநிலத் தலைவரையே பலி கொடுத்துள்ளது. இந்து முன்னணியின் இரண்டாவது மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த ராஜகோபாலன் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் போராட்டத்தை கையில் எடுத்ததற்காக படுகொலை செய்யப்பட்டார்.

இருந்தும் இந்து முன்னணி வருடம் தவறாமல் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்து பல்லாயிரம் பேர் கைதாகி காவலில் உள்ளனர். கடந்த ஆண்டு இந்து முன்னணி மதுரை கோட்டச் செயலாளர் அரச பாண்டி மூலமாகவும் கார்த்திகை தீபம் ஏற்ற வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது. இருந்தும் அரசு கார்த்திகை தீபத்தை ஏற்ற வில்லை.

சென்ற வருடம் கார்த்திகை தீபத்தன்று இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்து முன்னணி மக்கள் போராட்டத்தில் மட்டுமல்லாமல், சட்டப் போராட்டத்திலும் வென்றுள்ளது. இவ்வளவு சக்தியோடு இந்து மக்களுக்காகவும், முருக பக்தர்களுக்காகவும் இந்து முன்னணி இந்த ஆண்டும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் செய்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றச் செய்ய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தீபத் தூணில் தீபம் ஏற்றிட வேண்டி தொடர் போராட்டமாக (நாளை) வருகின்ற நவ.14-ம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கந்த சஷ்டி கவசம் பாடலை "ஒன்று கூடுவோம் சஷ்டி பாடுவோம்" என்கின்ற தலைப்பில் பொதுமக்களை இணைத்து பாராயணம் செய்ய உள்ளோம்.

தெய்வ சக்திக்காக கந்த சஷ்டி பாராயணம் செய்வது போல, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வருகின்ற நவம்பர் 18-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபம் அருகே மாலை 4 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்த உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளனர். முருகன் மீது பக்தி கொண்டவர்கள் இந்த அறிக்கையை தகவலாக கொண்டு நாமும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற வேண்டும் என்பது இந்து முன்னணியின் கோரிக்கையாகும்.

நீதிமன்ற உத்தரவு இருப்பதால் புதிய அரசு கண்டிப்பாக தீபம் ஏற்றும் என்றும் பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை பெற்று வென்று ஆட்சி அமைத்ததால் இந்துக்களின் கோரிக்கைகளையும், முருக பக்தர்களின் பக்தியையும் மனதில் வைத்து அரசு தீபம் ஏற்றும் என்றும் எதிர்பார்க்கிறோம். ஆதலால் வருகின்ற நவ.24 அதாவது கார்த்திகை 8ம் தேதி திருக்கார்த்திகை அன்று 100 வருடத்திற்கு மேல் நாம் எதிர்பார்க்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் அரசும், அறநிலையத் துறையும் தீபம் ஏற்றுவதை நாம் காண வேண்டும். இந்தத் தலைமுறைக்கு கிடைத்த ஒரு பெரும் பாக்கியம் என்னவென்றால் நம் முன்னோர்கள் காணாத தீபத்தை நாம் நம் கண்களால் காணப் போகின்றோம்.

ஆதலால் அனைத்து பொதுமக்களும் இந்து முன்னணி ஒருங்கிணைக்கும் "ஒன்று கூடுவோம் சஷ்டி பாடுவோம்"நிகழ்விலும், நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் நவம்பர் 24-ல் தீபம் காண குடும்பத்துடன் கலந்துகொள்வது என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழ் கடவுள் முருகனின் அருள் பெறுமாறு இந்து முன்னணி சார்பாக பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT