தென்காசி: “கட்சி, சாதி, மதம் கடந்து வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், வைகோ மீதோ, என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம் என்று வைகோவிடம் தெரிவித்தேன்” என கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ தி.மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன், இது தொடர்பாக தனது கருத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “மதிமுக அலுவலகமான தாயகத்தில் ஜூன் 26-ம் தேதி வைகோவை சந்தித்து பேசினேன்.
கட்சி, சாதி, மதம் கடந்து வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், வைகோ மீதோ, என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தேன்.
சட்டப்பேரவையில் எனது செயல்பாடுகள் தகுதி நீக்கத்துக்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம் என்றும், இப்போது அவசரம் வேண்டாம் என்றும், குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம் என்றும் கூறினேன்.
கூட்டணி குறித்து எடுக்கும் முடிவை மதிப்பதாகவும், இன்னும் சில பல செய்திகளையும் வைகோவிடம் கூறி கண்ணீருடன் முறையிட்டேன். அதன்பின்னர், இரவில் வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை பொதுக் குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக் குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை மதிமுக பொருளாளர் மூலம் வைகோ கவனத்துக்கு சொல்லியுள்ளேன்.
42 ஆண்டுகளாக வைகோ மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது. அதேபோல், வாக்களித்த மக்கள் பெருமைப்படும் வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கும் வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், வைகோவும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது.
எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் கருத்து. இந்த கருத்துகள் வைகோவின் நலனையும் உள்ளடக்கியது” என்று அவர் தெரிவித்துள்ளார்.