கோவில்பட்டி: ‘தமிழக வெற்றிக் கழகம் எனும் கானல் நீர் விரைவில் காணாமல்விடும்’ என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தவெக பொறுப்பாளர் பிரவீன் தலைமையிலான கட்சியினர், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று என்றால் அதிமுகதான். இந்த தேர்தலிலும் அந்த நிலைதான் உள்ளது. புதிதாக கட்சி தொடங்கியவர்கள், ‘எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி’ என்று கூறுவது, அவர்களில் யார் எதிர்க்கட்சியாக வரப்போகின்றனர் என்பதாக இருக்கும்.
அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். தமிழக வெற்றிக் கழகம் வெறும் கானல் நீர் தான். வெயில் காலம் தொடங்கிவிட்டது. இச்சமயத்தில் தென்படும் கானல் நீர்சில நிமிடங்களில் காணாமல் போய் விடும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, வெற்றி பெறப்போகும் அதிமுகவுக்கு விளாத்திகுளத்தைச் சேர்ந்த தவெகவினர் வந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் யாரும் திருப்தியாக இல்லை. திமுக - காங்கிரஸ் இடையே இருந்த புகைச்சல் தற்போது தீப்பிடிக்க தொடங்கி உள்ளது. பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என விசிக தலைவர் கண்டிஷன் போட்டுள்ளார்.
ஆனால், அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. எங்கள் கூட்டணியின் ஒரே நோக்கம் மக்களைத் துன்பப்படுத்தி, ஏமாற்றிய திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது மட்டும்தான். இவ்வாறு அவர் கூறினார்.