புதுச்சேரி: “தேர்தலுக்கு பிறகு மாறுப்பட்ட கருத்துக் கணிப்புகள் வந்தாலும், புதுச்சேரி மற்றும் தமிழத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்பது உறுதி” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் ‘திருப்பி அடித்த வரலாறு’ நூல் வெளியீடு மற்றும் பாராட்டு விழா, அவரது சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டதை கொண்டாடும் விழா என இருபெரும் விழா தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேர்தல் முடிவு நாளை மறுதினம் வெளியாகிறது. இதனை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு வணிக சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாய் உயர்த்தியுள்ள கொடுமை நடந்திருக்கிறது. இதனால் வணிக நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருப்பது மட்டுமல்ல ஓட்டல்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை 20 சதவீதம் உயரும் என்று அறிவுத்துள்ளார்கள். இதன்மூலம் மிகப் பெரிய அளவுக்கு மக்கள் தலைமையில் சுமையை மத்திய அரசு ஏற்றி விட்டுள்ளது.
அடுத்தகட்டமாக சமையல் எரிவாயு மற்றும் டீசல், பெட்ரோல் விலையும் உயரும் என்ற அறிவிப்பும் வந்து கொண்டிருக்கிறது. அந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தேர்தலுக்கு பிறகு மாறுப்பட்ட கருத்துக் கணிப்புகள் வந்தாலும், புதுச்சேரி, தமிழத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்கிற சூழல்தான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் புதிய அரசியல் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும், யார் முதல்வராக வருவார், எந்த அணி வெற்றி பெறும் என்பதை தெளிவாக கணிக்க முடியவில்லை. ஏனென்றால், தேர்தலில் குழப்பமான சூழ்நிலை நிலவி விட்டது. அணிக்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ், திமுக ஒருமித்த கருத்தோடு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் உறுதியாக இருந்திருந்தால், நிச்சயமாக அந்த அணிக்கு மக்கள் மகத்தான ஆதரவை அளித்திருப்பார்கள்.
ஆனால், நிலையான உறுதிபாட்டினை திமுக, காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொள்ளாதது, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்காதது, காங்கிரஸ் கட்சிக்குள் பரஸ்பர போட்டி என்பதெல்லாம் ஏற்பட்டு, ஒரு குழப்பத்துக்கு அவர்களே காரணமாகிவிட்டார்கள். எதுவாக இருந்தாலும், தேர்தல் முடிவு எப்படி வர போகிறது என்று பார்க்க வேண்டி இருக்கிறது.
மாஹேவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவோடு போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட நாங்கள் விரும்பினாலும், 5 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்று திமுக கூறியது வருத்தம் அளித்தது. 1, 2 இடத்தை உயர்த்தி கொடுப்பதால் கூட்டணிக்குள் குழப்பம் வந்துவிட போவதில்லை.
எங்களுக்குள் மனச்சங்கடங்கள் இருந்தாலும், தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அதிமுக துணையோடு பாஜக ஆட்சியை பிடிக்க இடம் அளித்துவிடக் கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காக திமுகவுடன் இணைந்து பணியாற்றி உள்ளோம். எதிர்காலத்திலும் பாஜகவை எதிர்த்து போராடுவோம்.
அதேசமயம், எதிர்காலத்தில் ஆட்சியை அமைக்கக் கூடிய திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்து மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எங்களுடைய அணுகுமுறையை மேற்கொள்வோம்.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதில் ஒரு பகுதியினர் விஜய் பின்பு சென்றிருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, மாற்றம் வேண்டும் என்பது இளைஞர்களிடம் இருக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்களை அணி திரட்டுவதற்கு ஆக்கப்பூர்வமான வேலையை மேற்கொள்வோம்” என்று அவர் கூறினார்.