செங்கல்பட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: பழனிசாமி அவர்களே நீங்கள் ஆட்சிக்கு வந்து செய்த சாதனை என்ன நீங்கள் அந்தகட்சியின் தலைவராக வந்த பின்னர் உங்களுடைய சாதனை என்னவென்று விளக்க முடியுமா? தமிழகத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது தான் பழனிசாமியின் சாதனை.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால் உங்களால் சுதந்திரமாக சுமுகமாக தமிழகத்தை ஆள முடியுமா. கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க முடியுமா.
தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜகவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவது தான் நடக்குமே தவிர அதிமுக ஆட்சியாக அது இருக்காது.
அதிமுக தேர்தலில் வெற்றி பெறப் போவது இல்லை என்பது உண்மை. அப்படியே வெற்றி பெற்றாலும் பாஜகவின் நிர்ப்பந்தத்துக்கு அடிமை ஆட்சியாக தான் இருக்க முடியும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள் இன்று வரை கட்டி முடிக்கப்பட்டதா. தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை கேட்டீர்கள் கொடுத்தார்களா.
தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கூட மத்திய அரசு கொடுக்கவில்லை திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை என்பது வேறு விஷயம் உங்கள் ஆட்சியிலாவது கொடுத்தார்களா. நாட்டின் முக்கியமான துறை கல்வித்துறை இதன் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டது.
ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்றாலும் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்தை மாற்ற வேண்டும் என்றாலும் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். பள்ளிக்கூட பாடத்தை கூட அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். இப்படி இந்தியாவில் மாநிலங்களே இருக்கக் கூடாது என்ற முடிவில் அவர்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக, அதிமுக அணிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது. இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறப் போகிறது என பேசினார்.