நாதப்ரம்மம் அமைப்பின் சங்கீத ராக மஹோத்ஸவ விழாவில் நீதியரசர் ஜி.சந்திரசேகரன் பங்கேற்று, வித்வான்கள் எட அன்னவாசல் மணிசங்கர் (நாதஸ்வரம்), ஜெயந்தி மணிசங்கர் (வயலின்), அமிர்தவர்ஷினி மணிசங்கர் (தவில்) ஆகியோருக்கு ‘நாத ஸ்வரலயகான மணிகள்’ விருது வழங்கி கவுரவித்தார். உடன் ரோட்டேரியன் கே.சீனிவாசன், நாதப்ரம்மம் அமைப்பின் நிறுவனர் என்.சுப்பிரமணியன், கவுரவ செயலர் பத்ரி நாராயணன். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: நலிவடைந்த கலைஞர்களுக்கு சபாக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நாதப்ரம்மத்தின் சங்கீத ராக மஹோத்ஸவ விழாவில் நீதியரசர் ஜி.சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாதப்ரம்மம் யுனைடெட் கியான் அகாடமி (NUGA) என்ற அமைப்பு பாரம்பரிய இந்திய இசை, கல்வி, கலை, கலாச்சாரம், யோகா ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2002-ல் தொடங்கப்பட்டது. அதுமுதல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்திவருகிறது.
நாதப்ரம்மம் அமைப்பு தொடங்கி 24 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்த ஆண்டு இசைவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ராஜு தெருவில் அமைந்துள்ள அனுக்ரஹா ஏசி மினி ஹாலில் கடந்த 19-ம் தேதி சங்கீத ராக மஹோத்ஸவம் தொடங்கியது. நாதப்ரம்மத்தின் நிறுவனர் என். சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.
தந்தை, தாய், மகள்: நீதியரசரும், கடன் மீட்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் (சென்னை) தலைவருமான ஜி.சந்திரசேகரன், விழாவை தொடங்கிவைத்தார். நாதஸ்வரக் கலைஞர் எட அன்னவாசல் மணிசங்கர், வயலின் கலைஞரும், திருவாருர் இசைப் பள்ளி ஆசிரியையுமான ஜெயந்தி மணிசங்கர், சட்டக் கல்லூரி மாணவியும் தவில் கலைஞருமான அமிர்தவர்ஷினி மணி சங்கர் ஆகியோருக்கு ‘நாத ஸ்வரலயகான மணிகள்’ விருதை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சிய பேசிய அவர்,“திறமை இருந்தும் வாய்ப்புகிடைக்காதவர்களுக்கு சபாக்கள், நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும். நலிவடைந்த கலைஞர்களுக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு (தந்தை, தாய், மகள்) சேர்த்து விருது தருவது இதுவே முதல் முறை. இளம் தலைமுறையினருக்கு அவர்கள் பெற்றோரின் ஊக்குவிப்பு, ஆதரவு அவசியம். அந்த வகையில் அமிர்தவர்ஷினிக்கு அவரது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர்” என்றார்.
இசை என்பது அருமருந்து: ஏற்புரை வழங்கிய ஜெயந்தி மணிசங்கர், “இசை என்பது அருமருந்து. அனைத்து கவலைகளையும் மறக்கச் செய்வது இசை. குடும்பத்தில் உள்ள அனைவரும் இசையுடன் தொடர்பில் இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மூவரும் சேர்ந்து விருது பெறுவதை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்” என்றார். நாதப்ரம்மத்தின் கவுரவ செயலர் மருத்துவர் டி.பத்ரிநாராயணன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ரோட்டேரியன் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.