நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் 
தமிழகம்

செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பி விசாரணைகளில் பங்கேற்க கூடாது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கி.மகாராஜன்

மதுரை: “செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பி நீதிமன்ற விசாரணைகளில் வழக்கறிஞர்கள் பங்கேற்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க( எம் பி ஏ) சட்ட எழுத்தறிவு மன்றம் சார்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித ஆற்றல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: தொழில்நுட்பம் என்பது அடித்தளமாகாது; தொழில்நுட்பம் கூரை போன்றது. அடித்தளம் என்பது மனிதனே அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் தனித்திறமையின் மீது அவன் நம்பிக்கை கொண்டு எதையும் செயல்படுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மனிதன் அதை தனது வேலை ஆள் போல்தான் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாக நம்பி அதன் மூலம் வரக்கூடிய முடிவுகளுக்கெல்லாம் மனிதன் தலையாட்டினால் அது முதலாளி ஆகிவிடும். செயற்கை நுண்ணறிவை முழுமையாக சார்ந்து படைப்புகள் உருவாக்குவது நீதிமன்றங்களிலே அதனை சார்ந்து மட்டுமே விசாரணைகளில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள தகுந்தது அல்ல.

எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு பார்த்துக் கொள்ளும் என்று நம்முடன் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் அதனிடம் ஒப்படைத்தால் அது ஒரு வெற்றிகரமான இலக்கை அடைவதற்கு எந்த வகையிலும் உதவாது. மனிதன் சக மனிதனை முழுமையாக நம்ப வேண்டும்.

இந்த உலகம் என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் சுழல்கிறது. குறைந்த உழைப்பில் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு இப்போது அதிகமாகி உள்ளது. அதற்கு அவன் தேர்ந்தெடுக்கக்கூடிய வழிதான் இந்த செயற்கை நுண்ணறிவு.

புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்கள் அறிவை விரிவு செய்யும். ஒரு மனிதன் புத்தகத்தை எந்தவித இடர்பாடும் இல்லாமல் கவனச் சிதறும் இல்லாமல் வாசிக்கும் பொழுது அவன் பெரிய விஷயங்களை தெரிவிக்கிறான். அவனது மூளை இன்னும் விசாலமாகிறது. அதன் மூலம் அவன் ஒரு புதிய படைப்பாளியாக உருவாகிறான்.

அப்படி உருவாகும் பொழுது ஒரு மனிதனின் மனமும் விசாலமாகும்; சிந்தனையும் பெரிதாகிறது. அப்படிப்பட்ட சிந்தனையில் இருந்து உருவாகக்கூடிய அனைத்து செயல்களும் காலத்துக்கும் இருக்க கூடியதாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT