தமிழகம்

“தீப விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி விஷமத்தனம்” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யிலுள்ள தீபத்​தூணில் பூஜை செய்ய 5 பேருக்கு அனு​மதி வழங்​கி​னால், நீதி​மன்ற அவம​திப்பு மனு முடிக்​கப்​படும். இது தொடர்​பாக மதுரை மாவட்ட ஆட்​சி​யர் நாளை பதிலளிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்ளது.

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மதுரை காவல் ஆணை​யர், துணை ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கோரி பிர​தான வழக்​கின் மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மனுத் தாக்​கல் செய்​திருந்​தார்.

          

மற்​றொரு மனு​தா​ர​ரான அரச ​பாண்​டி, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் மீது இந்​திய ஆட்​சிப் பணி விதி​கள் அடிப்​படை​யில் துறைரீதி​யாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கக் கோரி மனுத் தாக்​கல் செய்​தார். அமைச்​சர் ரகுப​தி​யை​யும் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் சேர்க்​கக் கோரி பரமசிவம் என்​பவர் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுக்​கள் அனைத்​தும் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன் விசா​ரணைக்கு வந்​தன. மதுரை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார் ஆஜரா​னார். அவர் தாக்​கல் செய்த பதில் மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப விவ​காரத்​தில் நீதி​மன்ற உத்​தர​வுக்​குப் பிறகு அங்கு ஒரேநேரத்​தில் பல்​வேறு குழுக்​கள் திரண்​ட​தா​லும், அங்கு கடந்த காலங்​களில் நடந்த சம்​பவங்​களைக் கருத்​தில் கொண்​டும், பொது அமைதி மற்​றும் பொதுச்சொத்​துகளுக்கு சேதம் ஏற்​படு​வதைத் தடுக்​க​வும், சட்​டம்- ஒழுங்​கைப் பாது​காக்​கும் நோக்​கிலும் மாவட்ட நிர்​வாகம் தலை​யிட வேண்​டிய​தானது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த மாநகர் காவல் ஆணை​யர் அளித்த கடிதத்​தின் அடிப்​படை​யில் 144 தடை​யாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. இந்த உத்​தரவு சரி​யான நேரத்​தில் பிறப்​பிக்​கப்​பட்​ட​தால் பெரிய மதரீ​தி​யான மோதல் தடுக்​கப்​பட்​டது.

நிபந்​தனையற்ற மன்​னிப்​பு

சட்​டம்- ஒழுங்​கைப் பராமரிக்​கும் நோக்​கத்​தில் மட்​டுமே தடை​யாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. வேறு எந்​தவிதமாமன காரண​மும் இல்லை. நீதி​மன்ற உத்​தர​வு​கள் சட்​டத்​தின் உத்​தர​வு​கள் என்​பதை அறிவேன். அதை மீறும் எண்​ணம் இல்​லை. நீதி​மன்​றத்​தில் நிபந்​தனையற்ற மன்​னிப்​புக் கோரு​கிறேன்.

இதையேற்று நீதி​மன்ற அவம​திப்பு மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு கோரி​யிருந்​தார். பின்​னர் நீதிப​தி, நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் ஏற்கெனவே ஏற்​றிய இடத்​தில் தீபம் ஏற்​றக் கூற​வில்​லை.

இந்​துக்​களுக்​குச் சொந்​த​மான பகு​தி​யில் தீபம் ஏற்ற வேண்​டும் என்​று​தான் உத்​தர​விடப்​பட்​டது என்​றார். அதற்கு அரசுத் தரப்​பில், சட்​டம்- ஒழுங்​கைப் பாது​காக்க வேண்​டியது அரசு நிர்​வாகத்​தின் கடமை. அதைக் கருத்​தில் கொண்டு அரசு நிர்​வாகம் செயல்​பட்​டது.

அடுத்த கார்த்​திகை தீப தினத்​துக்கு முன்பு இந்த விவகாரத்தில் உரிய முடி​வெடுக்​கப்​படும் எனக் தெரிவிக்கப்பட்​டது. பின்​னர் நீதிப​தி, நீதி​மன்​றம் சொல்​லும் 5 பேர் கோயில் மலை உச்​சிக்​குச் சென்று பூஜை செய்ய அனு​ம​திக்க வேண்​டும். அவ்​வாறு அனு​ம​தித்​தால் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கை முடித்து வைக்​கிறேன்.

இதுதொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யர் உரிய முடி​வெடுத்து நாளை (மார்ச் 4) தெரிவிக்க வேண்​டும். அடுத்த விசா​ரணை​யின் போது மாவட்ட ஆட்​சி​யர் ஆஜராக வேண்​டாம். மாநகர் காவல் ஆணை​யர், துணை ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆஜராக வேண்​டும் என உத்​தர​விட்​டார்.

திருப்​பரங்​குன்​றம் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் அமைச்​சர் ரகுப​தி​யைச் சேர்க்க வேண்​டும் என்ற கோரிக்​கையை நீதிபதி நிராகரித்து உத்​தர​விட்​டார்.

‘தீப விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி விஷமத்தனம்’

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமைச்சர் ரகுபதியை சேர்க்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை அனுமதிக்க முடியாது என்று கூற அமைச்சருக்கு மட்டும் அல்ல, வேறு யாருக்கும் துணிச்சல் கிடையாது. தீர்ப்புக்கு பிறகு இருக்கும் ஒரே வழி மேல்முறையீடு அல்லது மறுஆய்வுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதுதான்.

பொதுவெளியில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதன் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும் அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.

சட்ட அமைச்சர் போன்ற உயர் பதவியை வகித்த ஒருவருக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர் ரகுபதியின் கருத்து வெளிப்படையானது. அதை அவர் இதுவரை மறுக்கவில்லை. உண்மையில் தகன மைதானம் என அவர் கூறிய கருத்து பரவலாக ஏளனத்தை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் அவரின் அறியாமையை ஒப்புக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என ரகுபதி கூறினார். ஆனால் இன்று வரை மேல்முறையீடு செய்யவில்லை.

அவரின் நிலைப்பாட்டை தடை உத்தரவு பிறப்பித்த மதுரை மாவட்ட ஆட்சியர் தவிரவேறு யாராலும் மறுக்கப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை அழைக்க மறுக்கிறேன்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலுக்காக திசை திருப்ப ரகுபதி விஷமத்தனம் செய்துள்ளார். அமைச்சரின் கருத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அமைச்சருக்கு எதிரான இடையீட்டு மனுவை முடிக்க நினைக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க தயங்கமாட்டேன். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT