கரூர்: “பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம். அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது” என காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் மனக் குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வேட்பாளர்கள் முன்பே முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன.
நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி, வருகிற, தகுதியும், மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது வேதனையளிக்கிறது.
இருபது, முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில ஆண்டுகள் மட்டுமே கொண்டுள்ள, கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த 38 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பான்மை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர், அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டின் அரசியல், தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்திராத ஒன்று. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
அதேபோல 28 தொகுதிகளில் 6 தனித் தொகுதிகளை கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி, மிகவும் பின்தங்கிய, விளிம்பு நிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது. இரு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டுக்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டப்பேரவைக் கட்சி தலைவர், பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ, தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ, உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும், அக்கறையும் இல்லை என்பது தெளிவு.
இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை. இந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம். அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது.
30 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். எவ்வளவோ கடினமான காலங்களை, சவால்களை கட்சி எதிர் கொண்ட போதெல்லாம் உணர்வுப் பூர்வமான ஒட்டுதலோடு பணியாற்றியிருக்கிறேன். போராடியிருக்கிறேன். முதன் முதலாக மிகவும் அந்நியமாக உணர்கிறேன்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து வாக்குப்பதிவு முடிந்த பிறகே விரிவாகப் பேச விரும்புகிறேன். இந்த நேரத்தில் மனம் சோர்ந்து போயிருக்கின்ற, தமிழகத்தில் ஏறக்குறைய 60 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும், காங்கிரஸ் கொடியை பெருமையோடு உயர்த்திப் பிடித்திருக்கின்ற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எனது பேரன்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.