தமிழகம்

“விஜய்யை வழிநடத்துபவர்கள் சரியில்லை” - ஜோஸ் சார்லஸ் மார்டின் கருத்து

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரிய மாநிலங்களை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவது கடினம்.

புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தை சுலபமாக ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றலாம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம். கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது எங்கள் கொள்கை.

விஜய் உடன் இருப்பவர்கள் சரி இல்லை. அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார். புதுச்சேரியை பற்றி புரிதல் இல்லாமல் விஜய் இருக்கும் நிலையில், அவருடன் கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டும். அவரை வழிநடத்துபவர்கள் சரியில்லை.

கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. பாதுகாப்புக்கும் பந்தாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என்னை விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரியில் பல கொலைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை விட, சிறப்பு மாநில அந்தஸ்து தான் தற்போதைக்கு தேவை.

லட்சிய ஜனநாயக கட்சியில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு இளைஞர்கள், மாற்று கட்சியினர் என அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இருப்பினும் அவர்கள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT