திருநெல்வேலி: "பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி இணைப்பு குறித்து இருவரையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவேன்" என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வரும் சட்டப் பேரவை த் தேர்தலை சந்திப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜான்பாண்டியன் கூறியது: “சட்டப் பேரவை தேர்தலை சந்திப்பதற்காக கட்சியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசியல் ரீதியிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை யார் அழைத்து அங்கீகாரம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது தான் தேர்தலை சந்திக்க இருக்கிறார். அவர் களத்திற்கு வரட்டும் பார்ப்போம். விஜய் கட்சிக்கு அதிக முக்கியத்துவத்தை மீடியாக்கள்தான் வழங்கி வருகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவராக நான் பதவி வகித்து உள்ளேன். பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு நான் மிகவும் மன வருத்தப்பட்டேன். வன்னியர்களுக்காக போராடிய போராளி கண்ணீர் விட்டது வருத்தத்திற்குரியது.
கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இணைய வேண்டும். இணைந்து கட்சி பணி ஆற்ற வேண்டும். இருவரை இணைப்பது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இதற்காக இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசுவேன்.
தமிழகத்தில் சிறார் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதற்கு தாய், தந்தைதான் பொறுப்பு. அவர்களின் வளர்ப்பு சரியில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிள்ளைகளை திருத்துவார்கள்.
பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
'விஜய் கட்சியுடன் கூட்டணியில் இணைவீர்களா' என்ற கேள்விக்கு, `அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை' என பதிலளித்தார்.