சென்னை: நடப்பாண்டில் முதுகலை படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் வழங்கப்பட்ட பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டம் காணொலியில் நடந்தது. சங்க நிர்வாகிகள், நடப்பாண்டு பட்டமேற்படிப்பு முடித்த, முடிக்கவிருக்கும் அரசு மருத்துவர்கள் (சர்வீஸ் பிஜி) கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: நடப்பாண்டில் பட்டமேற்படிப்பு முடிக்கும் (ஜூலை முதல் தற்போது வரையில்) அரசு சேவை மருத்துவர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி ஆணை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக அல்லது நிரந்தர பணி மாறுதல் ஆணை எதுவாக இருப்பினும் அது வெளிப்படையான கலந்தாய்வின் மூலமே நடத்த வேண்டும். சர்வீஸ் சீனியர்களுக்கு மருத்துவக் கல்வித் துறையில் பணியிடங்கள் வழங்காமல், பணி இளையோருக்கு வழங்குவது எதிர்கால சிக்கல்களை உருவாக்கிடும்.
மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதும் தற்போதைய நிலைக்கு ஒரு காரணியாக உள்ளது. இதுபோன்ற நிர்வாக தவறுகளால், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.
கலந்தாய்வு இல்லாமல் வழங்கப்பட்ட ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கலந்தாய்வின் மூலமே தற்காலிக அல்லது நிரந்தர பணி ஆணைகளை பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.