மதுரையில் திருமண வீட்டார் கொண்டு சென்ற நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரை: நடப்பு மாதம் அதிகளவு முகூர்த்த தினங்கள் உள்ள நிலையில் திருமணத்துக்காக விழிப்புணர்வு இன்றி எடுத்து செல்லப்படும் நகை, பணம் வாகனச் சோதனையில் சிக்கி வருகின்றன. நேற்று மதுரை அருகே சக்குடியில் திருமணத்துக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.2 லட்சத்துக்கு மேல் ஆபரணங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுவோர் மீது தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதுரை கிழக்குத் தொகுதிக்குட்பட்ட சக்குடி - பூவந்தி சாலையில் வட்டாட்சியர் பாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.27 லட்சம் மதிப்பிலான 25 பவுன் நகைகள் எடுத்துச் சென்றது தெரிந்தது.
இந்த நகைகளை மதுரை ஆனையூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது மகளின் திருமணத்துக்காகக் கொண்டு சென்றார். ஆனால் நகைகளுக்கான உரிய ஆவணங்கள் இன்றி, அவற்றை பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர் கருணாகரன் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதியான ஏப்.23 வரை 7 சுப முகூர்த்தங்கள் உள்ளன. இந்த நாட்களில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடக்க உள்ளன. இதற்காக
ஏற்கெனவே நகைகள், புத்தாடைகள் வாங்கி வைத்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. அதை தவிர்த்து, தற்போது உரிய ஆவணம் இன்றி நகைகள், புத்தாடைகள் வாங்கிச் செல்வோர் சிரமத்தை சந்திக்கிறார்கள்.
கைப்பற்றப்பட்ட நகை, பணத்தை தேர்தல் அலுவலர்களிடம் இருந்து திரும்ப மீட்பது சிரமமான காரியம். அதனால் நகை, பணம் போன்றவற்றை எடுத்துச் செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை உடன் எடுத்துவர தேர்தல் அலுவலர்கள் கிராமங்கள், நகரங்களில் போதிய விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.