அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 
தமிழகம்

“ஓபிஎஸ், தினகரனை இணைப்பது பொதுச் செயலாளரின் முடிவு” - ஜெயக்குமார் கருத்து

ம.மகாராஜன்

“ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் தான் எடுப்பார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி, நேற்று மெரினாவில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது: எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்காக வாரி வழங்கியவர். 1977-ல் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார். தற்போது அதிமுக பழனிசாமி தலைமையில் ஒரு வலிமையான இரும்புக் கோட்டையாக திகழ்கிறது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரமாக இருந்து வருகிறது.

இதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் உதிர்ந்த செங்கற்கள் மட்டுமே. உதிர்ந்த செங்கற்களை பற்றி கோபுரத்துக்கு எந்தக் கவலையும் இல்லை. யாராலும் இந்தக் கோட்டையின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் தான் எடுப்பார்.

அவர் எடுத்துள்ள நிலைப்பாடுகள் குறித்து நான் கருத்துசொல்ல முடியாது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அது அவருடைய கருத்து. அதற்கு பழனிசாமி உரிய நேரத்தில் பதிலளிப்பார். அதேபோல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது. அதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு.

இதை தெளிவாக சொல்லிவிட்டோம். 100 நாள் வேலைத்திட்டம் கிராமப்புற மக்களுக்கானது. அதை சிதைக்காமல் உள்ளது உள்ளபடியே இருந்தால் விவசாய தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, இத்திட்டத்தில் எந்தவிதமான கெடுபிடிகளையும் மத்திய அரசு புகுத்தக் கூடாது. மகாத்மா காந்தியின் பெயரிலேயே இத்திட்டம் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT