எம்.எச்.ஜவாஹிருல்லா

 
தமிழகம்

“சிறப்பான ஓய்வூதியத் திட்டம்” - தமிழக முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு

தமிழினி

சென்னை: “சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திடத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையை ஏற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் வழங்கி இருக்கிறார்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஊழியர்களின் மீது அரசு எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது.

தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச் சூழலிலும், அரசுஅலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் மீது தமிழ்நாடு முதல்வர் வைத்திருக்கும் பேரன்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ஓய்வூதியத் திட்டத்திற்காகத் தொடர்ந்து போராடி வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்று இருக்கின்றனர். அவர்கள் அறிவித்திருந்த போராட்டத்தையும் திரும்பப் பெற்று இருக்கின்றனர். அரசு ஊழியர்களின் நலனின் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT