சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற விழாவில், ஐஐடி சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளையை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் ஐஐடி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, டீன் (உலகளாவிய ஈடுபாடு) ரகுநாதன் ரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

சென்னை ஐஐடி சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை தொடக்கவிழா

செய்திப்பிரிவு

சென்னை: ‘அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

உலக கல்வித்தளத்தில் தடம்பதிக்கும் வகையில் சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளையை சென்னை ஐஐடி ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் உயர்கல்வி, அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தொழில்கள் (ஸ்டார்ட்-அப்) ஆகியவற்றில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்நிலையில், இந்த அறக்கட்டளையை, ஐஐடியில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, அவரது முன்னிலையில் ஐஐடி மற்றும் ஜெர்மனி, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்டநாடுகளின் தொழில்நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இடையே 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர், ஐஐடி ‘சாஸ்த்ரா' தொழில்நுட்ப கலைவிழா, திறந்தவெளி நிகழ்ச்சி ஆகியவிழாக்களை மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற 'ஸ்பாட்லைட்' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நெறியாளர் மற்றும் ஐஐடி மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்து கூறியதாவது: இந்தியாவைச் சுற்றிலும் நல்லஅண்டை நாடுகளும் உள்ளன. தீய அண்டை நாடுகளும் உள்ளன. ஒரு நாடு, நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடும்பட்சத்தில் நமது நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது உரிமை. அதைத்தான் இந்தியா செய்தது. நம் நாட்டைபாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை யாரும் நமக்கு சொல்ல முடியாது.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு, நல்ல நாடாக இருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு நல்லெண்ண அடிப்படையில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால், நாங்கள் தொடர்ந்து தீவிரவாத செயல்களை ஊக்குவித்துக் கொண்டிருப்போம். சிந்து நதி நீரை தாருங்கள் என்று கேட்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.?

இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே விரும்புகிறது. நம்மிடம் நல்லுறவை பேணினால் நாமும் நல்லுறவை பேணுவோம். தேவையான உதவிகளையும் செய்வோம். அந்த வகையில்நமது அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், இலங்கைக்கு உதவி செய்தோம். நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு நிவாரணத் தொகுப்பாக 400 கோடி டாலர் வழங்கியது இந்தியா. மேலும், தித்வா புயலால் அந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது நிவாரண பொருட்களை வழங்கினோம். மீட்பு பணிகளையும் மேற்கொண்டோம். ‘உலகம் ஒரு குடும்பம்’ என்பது இந்தியாவின் பாரம்பரிய கொள்கை. அதன் அடிப்படையில்தான் இந்தியா உலக நாடுகளைப் பார்க்கிறது.

அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் இந்திய பாஸ்போர்ட்டை ஷாங்காய் விமான நிலையத்தில் பறித்து வைத்துக் கொண்டு சீன அதிகாரிகள் அப்பெண்ணை துன்புறுத்திய நிகழ்வு, சர்வதேச ஒப்பந்தங்களை மீறிய செயல். அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது வருங்காலத் திலும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி வரவேற்றுப் பேசும்போது, ‘‘சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை தொடங்கப்பட்ட தன் வாயிலாக உலக கல்வித்தளத்தில் தடம் பதிக்கும் முதல் ஐஐடி என்ற பெருமையை சென்னை ஐஐடி பெறுகிறது. இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ஐஐடி சாஸ்த்ரா தொழில்நுட்ப கலைவிழாவில் 80 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.

முன்னதாக, டீன் (உலகளாவிய ஈடுபாடு) ரகுநாதன் ரங்கசாமி. ஐஐடி ஆராய்ச்சி சர்வதேச அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் நாராயண் ஆகியோர் அறக்கட்டளையின் பணிகள் குறித்து அறிமுகவுரை ஆற்றினர். நிறைவாக ஆலோசகர் (கல்வி அல்லாத செயல்பாடுகள்) பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT