ஜெகத்ரட்சகன்
புதுச்சேரி: “புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கேட்டோம். இரட்டை என்ஜின் ஆட்சியில் ஏன் தரவில்லை. மாநில அந்தஸ்து பெற ஸ்டாலினால்தான் முடியும். தமிழக திட்டங்களை கொண்டு வர திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் தேவை” என்று திமுக கொள்கை பரப்பு செயலர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தொகுதி தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை தொடங்கியுள்ளனர். காலாப்பட்டு தொகுதியில் இன்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் பேசியதாவது: தமிழக ஆட்சியை புதுச்சேரிக்கும் கொண்டு வரவேண்டும்.
புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொன்னார்கள். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள இரு என்ஜின்களும் கெட்டு போய் விட்டன. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாகக்கூறினர். ஆனால் 15 பைசாக்கூட தரவில்லை.
புதுச்சேரி என்ஜின் பற்றி சொல்ல வேண்டியதில்லை. நிசப்தமான ஆட்சி நடக்கிறது. மக்களால் தேர்வான முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு பணம் தராவிட்டாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 5 ஆயிரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். தேர்தல் வரபோகிறது. பிரதமர் மோடி புதுச்சேரி வரபோகிறார். பத்தாயிரம் ரூபாய் தருவதாக சொல்வார்கள். ஆனால் அது பத்தாது. புதுச்சேரிக்கு குடும்பத்துக்கு ரூ. 25 ஆயிரம் தரவேண்டும்.
பிஹாரில் பத்து ஆயிரம் ரூபாய் தந்துள்ளார்கள். தேர்தலுக்காக, வாக்களிக்க லஞ்சம் கொடுத்தனர். ஆனால் தமிழகத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் தந்தார். தேர்தல் வருவதால் மூன்று மாதங்களுக்கு முன்பணமாக தமிழகத்தில் தந்துள்ளார். தமிழர்கள் என்றால் மத்தியில் இருப்போருக்கு பிடிக்காது. பாரதி பாடல்களை மட்டும் பாடுவார்கள்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டோம். இரட்டை என்ஜின் ஆட்சியில் ஏன் தரவில்லை. என்ன வளம் இல்லை - ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. மாநில அந்தஸ்து பெற ஸ்டாலினால்தான் முடியும். கருணாநிதி ரத்தம் சிந்திய திராவிட மண்ணான புதுச்சேரியை காக்கும் பொறுப்பு திமுகவுக்கு உண்டு. தமிழக திட்டங்களை கொண்டு வர திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்குத் தேவை” என்று அவர் கூறினார்.