ஜேசிடி பிரபாகர்

 
தமிழகம்

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதுதான் வழக்கம்” - சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தொகுதிக்கு பயன்படும் என்று மக்கள் சிந்திக்கக்கூடிய நிலைமை தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இருந்து வருவதை எல்லோரும் அறிவோம், என சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேசிடி.பிரபாகர், “தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் குறித்து பார்த்தால், சாதாரணமாகவே தேர்தல் வரலாற்றில், ஆளுங்கட்சியாக இருப்பவருக்கு வாக்களிப்பதன் மூலமாகத்தான் நம்முடைய தொகுதி நன்மை பெறும் என்கின்ற அந்த அடிப்படையில் தான் இதுவரைக்கும் இடைத்தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது தான் வழக்கம். ஏனென்றால் தொகுதிக்கு பயன்படும் என்று மக்கள் சிந்திக்கக்கூடிய நிலைமை தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இருந்து வருவதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். நான் பேரவையின் தலைவர் என்கிற முறையில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு விடையளிப்பது பொருத்தமல்ல என்று கருதுகிறேன்.

பேரவைத் தலைவர் என்கின்ற முறையில், வினாக்கள் விடைகள் நேரம் என்பதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் கேள்விகளுக்கு விடையளிப்பதற்காக அந்தந்த துறைகளுக்கு அந்த கேள்விகளை அனுப்பி வைத்து பதில் பெறுவது வழக்கம். அது அவையிலும் அளிக்கலாம். கொஞ்சம் காலதாமதமானால் அந்த விடைகளை கேள்வி கேட்ட அந்த உறுப்பினர்களுக்கும் பதில் அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

​இந்த முறை புதிதாக கேள்விகளை பதிவு செய்ய, நிறைய உறுப்பினர்கள் பேச வைக்க வேண்டும் என்று விரும்பினேன். நிறைய பேருக்கு வாய்ப்பளிக்கிற போது, புதிதாக பேசுபவர்கள் தங்கள் தொகுதிகளைப் பற்றிய கேள்விகளை யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று எழுப்புகிறார்கள். அப்படி கேள்வி எழுப்புகிற போது அமைச்சர் பெருமக்களுக்கு உடனடியாக அந்த துறையை சார்ந்த அதிகாரிகளை அவையிலிருந்தே தொடர்பு கொண்டு, உடனடியாக பதில் பெறுவதிலே சில சிரமங்கள் இருந்தது.

ஆனாலும் பல அமைச்சர்கள் அந்தந்த கேள்விகளுக்கு உடனடியாக அவை முடிவதற்கு முன்பாகவே பதிலை பெற்று, அவையில் சொன்னதையெல்லாம் நீங்கள் விரிவான அறிக்கையில் பார்த்திருப்பீர்கள். எல்லா உறுப்பினர்களுக்கும் சமமாக வாய்ப்பளிக்கப்பட்டது. குறிப்பாக, எதிர்க்கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டது. பதிவு செய்தவர்களுக்குரிய பதில் உடனே பெற முடியவில்லை.

யார் அவையிலே பதிவு செய்தார்களோ, மென்ஷன் செய்தார்களோ அவர்களுக்கு அந்த பதிலை அனுப்பி வைக்கிற அந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மிகச் சிறந்த ஜனநாயக முறையில் தான் இந்த முதல் கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

என்னை பாராட்டியதாகத்தான் செய்திகள் வந்திருக்கிறது. அதுதான் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதிமுக எம்எல்ஏ பதவி முறையீட்டில் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கும் நிலையில் தான் இந்த அவை இருக்கிறது. சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு தான், எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT