தமிழகம்

தமிழ் வழக்காடு மொழி தீர்மான விவகாரம்: பாமக பொது நல வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழ் மொழியை, உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டும், கடந்த செப்டம்பர் மாதமும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘கடந்த 2006ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆளுநர் பரிந்துரையுடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 1965 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தின்படி, தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 348(2) பிரிவு, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மாநில ஆளுநர், உயர் நீதிமன்றங்களில் இந்தி அல்லது மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது.

எனவே, கடந்த 2006-ஆம் ஆண்டு தீர்மானத்தையும், கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.’ என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT