சென்னை: அதிமுக எம்எல்ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கூச்சலும் அமளியும் ஏற்பட்டது. அப்போது தவெக - அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
முன்னாள் முதல்வர் பழனிசாமி: கடந்த 3 மாதங்களில் தவெக அரசின் குறிப்பிடத்தக்க சாதனை ஏதோ ஒரு பேரம் நடத்தி சில கட்சிகளையும், கட்சி உறுப்பினர்களையும் வாங்கியதுதான். இதுதான் இந்த அரசி்ன் சிறப்பான சாதனை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: 2017-க்கு முன்பு இருந்த அதிமுக ஆட்சியில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. அது ஜெயலலிதாவின் ஆட்சி. ஆனால், 2017-க்கு பிறகு உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அது ஜெயலலிதா ஆட்சி கிடையாது.
ஜெயலலிதா இருந்தவரை நீட் வரவில்லை, சிஏஏ வரவில்லை. அதனால்தான் எங்கள் முதல்வர் நீர்த்துப்போன ஆட்சி என்று உங்களை சொனனார். உங்கள் மீது நம்பிக்கை இருந்திருந்தால், உங்கள் உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் முழுவதுமாக விலகியதால் தான் எம்ஜிஆரின் விசுவாசிகளும் ஜெயலலிதாவின் விசுவாசிகளும் தவெகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். பேரம் என்று சொல்வது தவறு. உறுப்பினர்கள் கட்சித் தலைமை மீது நம்பிக்கை இழந்து ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் சேர்வது இயல்பு.
அமைச்சர் சி.டி. நிர்மல்குமார்: இது கூவத்தூர் இல்லை. தானாக முன்வந்து ராஜினாமா செய்து எங்கள் கட்சியில் சேர்ந்து உள்ளனர். இதில் எந்த கூவத்தூர் நிகழ்ச்சியும் நடைபெறவில்லை (அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த முக்கூர் சுப்ரமணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து, அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தமிட்டனர்.
பதிலுக்கு எதிர் வரிசையில் இருந்த தவெக உறுப்பினர்களும் இருக்கையில் இருந்து எழுந்து சத்த மிட்டனர். இதனால், பேரவையில் கூச்சலும் அமளியும் நிலவியது.
பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்: கடந்த 45 நிமிடங்கள் முன்னாள் முதல்வர் பழனிசாமி தனது ஆட்சியின் சாதனைகளை அமைதியாக சொன்னார். கடைசியாக சொன்ன சில கருத்துகள் ஆளும் கட்சியினர் பேசுவதற்கு வழி வகுத்துள்ளது.
இரண்டு (திமுக, அதிமுக) பேரும் சேர்ந்து கொண்டு பேசுவது எனக்குத் தெரியும். தயவுசெய்து உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் போய் அமருங்கள்.
திமுக கொறடா எ.வ.வேலு: குதிரை பேர விவகாரத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து உள்ளது.
நாங்கள் நடுநிலையாக நடந்து கொண்டுள்ளோம். அதுதான் எங்களது பாதுகாப்பு. நாங்கள் ஆண்ட கட்சி. அதிமுகவும் ஆண்ட கட்சி. அடுத்த முறை ஆளலாம் என்று திட்டம் போட்டு இருக்கும் கட்சி.
அமைச்சர் ராஜ்மோகன்: ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான கருத்தை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம்.
பழனிசாமி: அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு பின்னர் ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்திருப்பதை பார்த்து அதிமுக தொண்டர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் உழைத்துத்தான் ஒரு தொகுதியில் வெற்றி பெறுகிறார்கள். திமுகவும் அதிமுகவும் உங்கள் காலத்திலும் (பேரவைத் தலைவர் அதிமுகவில் இருந்த காலம்) ஒன்றாக சேரவில்லை.
இப்போது எங்கள் காலத்திலும் ஒன்றாக சேரவில்லை. நாங்கள் சேர்ந்து செயல்படுகிறோம் என்று பேரவைத் தலைவர் கூறுவது தவறு.
பேரவைத் தலைவர்: நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறீர்கள் என்று சொன்னதில் எந்தவித தவறான அர்த்தமும் இல்லை. உள்நோக்கமும் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.