ஈஷா நிறுவனர் சத்குரு

 
தமிழகம்

நேபாள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: ஈஷா நிறுவனர் சத்குரு அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோவை: நேபாள பெருவெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்கப்படும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அறிவித்துள்ளார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற ‘நேபாளத்துடன் தோளோடு தோள் கொடுப்போம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசியது: “அரசியல் எல்லைகளைக் கடந்து நிற்கும் இமயமலைப் பகுதி மிகவும் பிரம்மாண்டமானது. அதேசமயம் மிகவும் உணர்வுப்பூர்வமானதும்கூட.

மலைகளுக்கு நாட்டின் எல்லையோ, மொழியோ தெரியாது. இமயமலை பாதுகாப்பில் நிர்வாக ரீதியாக இணைந்து செயல்பட முடியாவிட்டாலும், ஆலோசனைகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்பாவது இருக்க வேண்டும்.

பனிப்பாறையின் பெரும்பகுதி 4,000 அடிகள் கீழே சரிந்து விழுந்த இந்த அசாதாரணமான பேரழிவை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சிறிய நாடான நேபாளத்தால் மட்டுமே இத்தகைய பிரம்மாண்டப் பேரழிவை தனியாக எதிர்கொள்ள முடியாது.

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி இமயமலையைப் பகிர்ந்தளிக்கப்பட்ட இயற்கை அமைப்பாகப் பார்த்து, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, இமயமலை பிராந்திய பேரிடர்களை எதிர்கொள்ள இந்திய, சீனா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய 5 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பை (இமாலயன் போர்டு) உருவாக்க வேண்டும்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நேபாளப் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்” என்று சத்குரு தெரிவித்தார்.

நேபாள தேசியப் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களில், ஈஷா அறக்கட்டளை ஒருங்கிணைத்த ‘கைலாய யாத்திரை’ சென்று, எல்லைப் பகுதியான கியிரோங் குடிவரவு மையத்தில் தங்கியிருந்த 77 யாத்ரீகர்கள் மற்றும் நேபாளப் பகுதியில் பணியிலிருந்த 3 ஈஷா தன்னார்வலர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT